பாளையங்கோட்டையில் நன்னடத்தை கைதிகளுக்கு பெட்ரோல் ‘பங்க்’கில் பணியாற்ற பயிற்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்


பாளையங்கோட்டையில் நன்னடத்தை கைதிகளுக்கு பெட்ரோல் ‘பங்க்’கில் பணியாற்ற பயிற்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Jan 2019 3:45 AM IST (Updated: 25 Jan 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நன்னடத்தை கைதிகளுக்கு பெட்ரோல் ‘பங்க்’கில் பணியாற்ற பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பெட்ரோல் ‘பங்க்’கில் நன்னடத்தை கைதிகள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

அவர்களுக்கு பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டையில் ஒரு பெட்ரோல் ‘பங்க்’கில் நடந்தது. அந்த பயிற்சி வகுப்பை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், புதுக்கோட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட 5 ஜெயில் வளாகங்களில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுடன் இணைந்து பெட்ரோல் ‘பங்க்’ தொடங்கப்பட உள்ளது. அங்கு ஏ.டி.எம். மையம், ஆவின் பாலகம் ஆகியவைகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் சிறை வளாகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், உணவு தானியங்களும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. நன்னடத்தை கைதிகள் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பெட்ரோல் ‘பங்க்’ 24 மணி நேரமும் செயல்படும். இந்த பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை. சிறையில் சாதிவாரியாக கைதிகளை பிரித்து அடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story