மலைக்கிராம மக்களுக்கு 5 மணி நேரம் நடந்து சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்


மலைக்கிராம மக்களுக்கு 5 மணி நேரம் நடந்து சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 25 Jan 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

5 மணி நேரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டி.ஜி.வினய் வழங்கினார்.

திண்டுக்கல், 

கொடைக்கானல் தாலுகா மன்னவனூர், மஞ்சம்பட்டி, உலுவக்காடு, மூங்கில்பள்ளம் ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் ஏராளமானோர் வசிக் கின்றனர். இவர்களுக் காக அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று செயல்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக, மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் மன்னவனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்தது. முறையான சாலை வசதி இல்லாத இந்த மலைக்கிராமங்களுக்கு கரடு முரடான பாதை வழியாக 5 மணி நேரம் நடைபயணமாகவே சென்ற கலெக்டர், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் பழங்குடியினர் மற்றும் பிற சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும் அது குறித்து மலைவாழ் மக்கள் அவ்வளவாக அறிந்து வைத்திருப்பதில்லை. அப்படியே தெரிந்து வைத்திருந்தாலும் நலத்திட்டங்களை பெறுவதில் அவர்களுக்கு சில நடைமுறை சிக்கல்களும் இருக்கிறது.

இதில் சாலை வசதி முறையாக இல்லாதது முக்கிய பிரச்சினையாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களால் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. எனவே அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மலையனூர் அசன்கொடை, கால கிணறு, வெள்ளகவி உள்பட 7 இடங்களில் சாலை வசதியை மேம்படுத்தும் பொருட்டு சாலை அளவீட்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை பணிகளை தொடங்க வனத்துறையிடம் அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும் வகையில் வன உரிமைக்குழுக்கள் அமைத்து வன உரிமை சான்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம், வன உரிமை பாதுகாக்கப்படும்.

இதுமட்டுமின்றி மலைவாழ் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை கிடைக்க சிறப்பு முகாம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, தனித்துணை கலெக்டர் சிவக்குமார், உதவி கலெக்டர் சிந்துஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story