கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் 1,712 பேர் கைது


கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் 1,712 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2019 10:45 PM GMT (Updated: 28 Jan 2019 6:11 PM GMT)

கிருஷ்ணகிரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 1,712 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ்-ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.

பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். 21 மாத நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் கடந்த 25-ந் தேதி கைதாகி சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 1,126 பெண்கள் உள்பட 1,712 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

Next Story