போரூர் அருகே தொழில் அதிபர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

போரூர் அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த சமயபுரம், 9-வது தெருவைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதம்(வயது 74). தொழில் அதிபரான இவர், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆய்வு கூடங்களுக்கு வேண்டிய ரசாயனம் மற்றும் உபகரணங்கள் வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை(68). இவர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.
நேற்றுமுன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டனர். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மற்றொரு அறையில் இருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
25 பவுன் நகை கொள்ளை
பீரோவில் சோதனை செய்தபோது, அதில் வைத்து இருந்த 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் மொட்டை மாடி யில் உள்ள கதவை உடைத்து, அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது.
மற்றொரு வீடு
இதையடுத்து கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மணி (67) என்பவரது வீட்டின் மொட்டை மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை திருடிச்சென்று உள்ளனர்.
முன்னதாக கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து விட்டு சாவகாசமாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் பாதி மதுவை அங்கேயே வைத்து விட்டு நகையுடன் தப்பிச் சென்று உள்ளனர்.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story