வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காமல் புறக்கணிப்பு சிவசேனா குற்றச்சாட்டு

வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காமல் மோடி அரசு புறக்கணித்து இருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை,
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபன் ஹசாரிகா ஆகிய 3 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்தநிலையில், விடுதலை போராட்ட வீரர் வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காமல் மோடி அரசு புறக்கணித்து இருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
துரதிருஷ்டமானது
காங்கிரஸ் கட்சியினர் தங்கள் ஆட்சி காலத்தில் வீர் சாவர்க்கரை அவமதித்தனர். ஆனால் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன செய்தது?. பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது, வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என போராடியது. ஆனால் அவர்கள் ஆட்சி காலத்தில் ராமர் கோவிலும் கட்டப்படவில்லை, வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்படவில்லை.
நாட்டின் சுதந்திர போராடத்தில் பங்கு கொண்டு வாழ்நாளில் பெரும் பகுதியை அந்தமானில் தனிமை சிறையில் கழித்த வீர் சாவர்க்கருக்கு மோடி ஆட்சியில் கூட பாரத ரத்னா வழங்கப்படாதது துரதிருஷ்டமானது.
தேர்தலை கருத்தில் கொண்டு...
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது என்றால், அவரை ஏன் 2-வது முறை ஜனாதிபதி ஆக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது தவறான முடிவு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சில ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், கடந்த ஆட்சியாளர்கள் இந்துத்துவா கொள்கையாளர் என்பதால் வீர் சாவர்க்கரை வேண்டும் என்றே புறக்கணித்தனர். எனவே பா.ஜனதா அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அந்த குறையை களைய வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story