ராஜபாளையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பு
ராஜபாளையத்தில் ஊருணி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே சம்மந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள குட்டு ஊருணி கரையை ஆக்கிரமித்து பல கடைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கட்டிடங்களால் நீர்வரத்து கால்வாய்கள் அடைக்கப்பட்டு ஊருணிக்கு தண்ணீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டது.
கட்டிட உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என வருவாய் துறை மூலமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு கொடுத்த காலக்கெடு முடிந்த பிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன.
இதையடுத்து தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் ஊருணி கரையில் கட்டப்பட்டு இருந்த 17 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கட்டிட உரிமையாளர்கள் வருவாய் துறையினர், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இதன் மூலம் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் ஊருணி பகுதியை சுற்றி 450 வீடுகள் உள்ளதாகவும், அதில் குடியிருப்போருக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்ட பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என தாசில்தார் ராமச்சந்திரன் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மின்சார துறை, தீயணைப்பு துறை மற்றும் 80-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story