ஐகோர்ட்டு உத்தரவின் படி நகராட்சி கடைகளின் அளவீடு ஆய்வு

ஐகோர்ட்டு உத்தரவின்படி ஊட்டி நகராட்சி கடைகளின் அளவீடு குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் 1,307 கடைகள், எட்டின்ஸ் சாலை, பழைய அக்ரஹார தெரு, புளுமவுண்டன் சாலை, பிங்கர்போஸ்ட், சேரிங்கிராஸ் உள்பட பல்வேறு இடங்களில் நகராட்சி வணிக வளாகங்களில் 282 கடைகள் செயல்பட்டு வருகின்றன. வணிக வளாகங்கள் மற்றும் நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2½ கோடி வருமானம் கிடைத்து வந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு நகராட்சி கமிஷனர் சத்தார் நகராட்சியில் அடிப்படை பணிகள், மேம்பாடுகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க போதிய நிதி இல்லாததால் தனிக்குழு அமைத்து கடைகளை அளவீடு செய்து வாடகையை உயர்த்தினார். இந்த வாடகை உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வாடகை தொகையும், வைப்புத்தொகையாக ரூ.10 கோடியும் என மொத்தம் ரூ.22 கோடி நகராட்சிக்கு வருமானமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அன்றைய நகராட்சி மன்றம் வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு தீர்மானம் அனுப்பியது.
ஆனால் தமிழக அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர்த்தப்பட்ட வாடகை தொகையை கட்ட இயலாது, வாடகையை குறைக்க வேண்டும் என்று நகராட்சியிடம் மனு அளித்தனர். இதற்கிடையில் வாடகை செலுத்தாத கடைகளை சீல் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன் காரணமாக மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஊட்டி நகராட்சி கடைகளுக்கு வாடகையை நிர்ணயம் செய்ய நகராட்சி நிர்வாகம் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், மண்டல நிர்வாக பொறியாளர் கண்காணிப்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்களில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வெள்ளக்கோவில், கோபிசெட்டிப்பாளையம், தாராபுரம் ஆகிய நகராட்சிகளின் கமிஷனர்கள், பொறியாளர்கள், நகர திட்டமைப்பு அலுவலர்கள், கட்டிட ஆய்வாளர்கள் என 20 பேர் அடங்கி உள்ளனர். மேலும் ஊட்டி நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், பொறியியல் பிரிவு அதிகாரிகள் உதவிக்காக நியமிக்கப்பட்டனர்.
ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான துணிக்கடை, மளிகைக்கடை, புத்தகக்கடை, மொத்த விற்பனை, காய்கறி, பழக்கடை, மீன் மற்றும் இறைச்சி கடை, ஓட்டல், வர்த்தக நிறுவனங்களின் அளவீடு குறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட 5 குழுவினர் தனித்தனியாக ஆய்வு செய்தனர். எந்த பகுதியில் கடை அமைந்து உள்ளது, அதன் உரிமையாளர் யார், எவ்வளவு அகலம், நீளத்தில் இருக்கிறது, கட்டிடங்களான கடைகள், தகரத்திலான கடைகள், வர்த்தக நிறுவன கடைகள் நகரின் முக்கிய பகுதியில் அமைந்து உள்ளதா மற்றும் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் குழுவினர் அளவீடு செய்யும்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு சிலர் தங்களது கடைகளை மூடிவிட்டு சென்று விட்டனர். கடைகளுக்கு வாடகையை நிர்ணயம் செய்வதற்கான அளவீடு இன்றும்(வியாழக்கிழமை) நடக்கிறது. குழு அளவீடு செய்யும்போது கடையை வாடகைக்கு எடுத்த உரிமையாளர்கள் தங்களது விவரங்களை தெரிவித்தனர். சிலர் உள்வாடகைக்கு கடைகளை எடுத்து இருந்ததால், தங்களது பெயர் மற்றும் விவரங்களை தெரிவிக்க முடியாமல் திணறினார்கள். குழுவின் அறிக்கைக்கு பின்னர் நகராட்சிக்கு அதிகமான வாடகையும், வைப்புத்தொகையும் கிடைக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஊட்டி நகர மக்கள் கூறும்போது, கடைகளை நடத்தும் உரிமையாளர்களின் ஆதார் எண் நகராட்சி அதிகாரிகள் பெற்று வைத்திருக்க வேண்டும். அப்போது தான் உள்வாடகை விடுவது குறையும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story