போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.1 கோடி மோசடி கணவன்- மனைவி உள்பட 5 பேர் கைது


போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.1 கோடி மோசடி கணவன்- மனைவி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2019 10:30 PM GMT (Updated: 6 Feb 2019 9:28 PM GMT)

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை தாம்பரத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆவடி மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த குப்புசாமி-மல்லிகா தம்பதியினர் கடந்த 2017-ம் ஆண்டு எங்கள் வங்கியில் இருந்து ரூ.1 கோடி கடன் பெற்றிருந்தனர். அதற்கு ஈடாக தனது தங்கை என்று கூறி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கிராமத்தில் உள்ள தேன்மொழி என்பவரின் வீட்டு மனைக்கான பத்திரத்தை குப்புசாமி வழங்கியிருந்தார். ஆனால் அவர் வங்கி கடனை முறையாக செலுத்தவில்லை. மேலும் அவர் சமர்ப்பித்த ஆவணங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குப்புசாமி தனது நண்பர்கள் மோகன்குமார், முரளிதரன், சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மோகன்குமார் போலி ஆவணங்கள் மூலம் சில வங்கிகளில் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கி மோசடி செய்த குப்புசாமி (வயது 44), அவரது மனைவி மல்லிகா (39), நண்பர்கள் மோகன்குமார் (46), முரளிதரன் (49), சீனிவாசன் (53) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story