5¾ கிலோ தங்க நகைகள் கொள்ளை, மர்ம ஆசாமிகளை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம்


5¾ கிலோ தங்க நகைகள் கொள்ளை, மர்ம ஆசாமிகளை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 9 Feb 2019 3:30 AM IST (Updated: 8 Feb 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி 5¾ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30 பேரிடம் அவர்கள் விசாரணை நடத்தி உள்ளனர்.

கோவை,

கோவையில் உள்ள சில நகை வியாபாரிகள் விமானம் மூலம் மும்பையில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்க நகைகளை அனுப்பி விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கோவை மில் ரோட்டில் உள்ள தனியார் பார்சல் நிறுவனம் மூலம் 5¾ கிலோ தங்க நகைகளை அனுப்பினார்கள். இதற்காக அந்த நிறுவனத்தின் ஊழியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிருத்திவி சிங் (வயது 26) என்பவர் மோட்டார் சைக்கிளில் தங்க நகைகளை விமான நிலையத்துக்கு காலை 5.30 மணியளவில் கொண்டு சென்றார். கோவை அவினாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்களில் மிளகாய் பொடி தூவி தாக்கி விட்டு ரூ.1½ கோடி நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கோவை பீளமேடு போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த துணிகர கொள்ளை வழக்கில் துப்பு துலக்குவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்க நகைகளை கொண்டு சென்ற பிருத்திவி சிங் மற்றும் பார்சல் நிறுவன ஊழியர்கள், நகைகளை மும்பைக்கு அனுப்பிய தங்க நகை வியாபாரிகள் 15 பேர் உள்பட 30 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக நகைகளை கொண்டு சென்ற பிருத்திவி சிங் மற்றும் அவர் வேலைபார்க்கும் பார்சல் நிறுவன ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும் கொள்ளையர்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

ஒருபுறம் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் மற்றொரு புறம் தனியார் பார்சல் அலுவலகம் உள்ள மில் ரோட்டில் இருந்து சம்பவம் நடந்த இடம் வரை உள்ள சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து சிக்னல் மற்றும் தனியார் கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தங்க நகைகளை கொண்டு செல்லும் பிருத்திவி சிங் பின்னால் இருசக்கர வாகனங்களில் யாராவது வருகிறார்களா? என்று கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வருவது பதிவாகி உள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தங்க நகைகளை மும்பைக்கு அனுப்புவதாக கூறி பார்சல் அனுப்பிய நிறுவன ஊழியர்கள், நகையை கொண்டு சென்ற பிருத்திவி சிங் மற்றும் நகைகளை அனுப்பிய 15 வியாபாரிகள் தவிர வேறு யாருக்கும் நகைகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வது தெரியாது. எனவே அவர்களில் ஒருவரின் துணையோடு தான் இந்த கொள்ளை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அது யார்? என்பது தான் இப்போதைய கேள்விக்குறி. இதற்காக அவர்கள் அனைவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது தடயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கிடையில், சந்தேகத்துக்கிடமான முறையில் நகைகளை விற்க யாராவது வருகிறார்களா? என்று கோவையில் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், வெளியூர் போலீசாரையும் உஷார்படுத்தி உள்ளோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story