சாலை பாதுகாப்பு வார விழாவில் எமதர்ம ராஜா வேடம் அணிந்து நூதன பிரசாரம்

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவில் எமதர்ம ராஜா வேடம் அணிந்து நூதன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மதுரை,
மதுரையில் மாநகர போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 4–ந் தேதி தொடங்கி, நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. அன்றைய தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் போலீசார் நகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இதில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதி முறைகள் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை போலீசார் நடத்தினர். அதில் எமதர்ம ராஜா வேடம் அணிந்த ஒருவரும், பூத வேடம் அணிந்த 2 பேரும் கோரிப்பாளையம் சிக்னல் பகுதிக்கு வந்தனர். அவர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களிடமும், காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களிடம் அதன் அவசியம் குறித்து விளக்கினார்கள்.
மேலும் சாலையில் செல்பவர்கள் செல்போன் பேசிக்கொண்டு நடந்து செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் நாடகம் நடித்து காட்டினார்கள். இந்த விழிப்புணர்வு பிரசாரம் மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம், கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வினாடி– வினா போட்டி கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 2 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 22 பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சாலை பாதுகாப்பு, விபத்து புள்ளி விவரங்கள், சட்டம் சார்ந்த கருத்துகள், நற்பழக்கங்கள், சாலை விதிகள், வாகனத்தின் அடிப்படை தகவல்கள், விபத்துகளை தடுக்கும் மற்றும் குறைக்கும் யுக்திகள், பொதுஅறிவு தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. இதில் முதல் இரண்டு இடங்களையும் மகாத்மா மெட்ரிக் பள்ளியும், 3–வது இடத்தை எஸ்.பி.ஓ.ஏ.பள்ளியும் வென்றது. வெற்றி பெற்ற 3 அணிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் போலீஸ் கமிஷனரால் வழங்கப்பட உள்ளது.