ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 136 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ.வழங்கினார்

ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 136 பேருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத்தொகையை கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஆனைமலை,
தமிழக அரசு சார்பில் வேலைக்கு செல்லும் பெண்கள் இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆனைமலை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் சார்பில் பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. இதற்கென முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
இதில் தகுதியுடைய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானியத் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆனைமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு தலைமை தாங்கினார். ஆனைமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் (ஊராட்சிகள்) முன்னிலை வகித்தார். இதில் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 19 ஊராட்சிகள், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கோட்டூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட 136 பெண்க ளுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத்தொகை காசோலைகளாக வழங்கப்பட்டன. இதனை கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்குதல், விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உதவிகரமாக இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆனை மலை வட்டாரத்தில் 136 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ளவர் களது விண்ணப்பங்கள் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்பட்டு, பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களை மானிய விலையில் பெறுகின்ற பெண்கள் மோட்டார் வாகன சட்டப்படி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள். அதிவேகமாக செல்லுதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அசோகன், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் சசிகலா (ஆனைமலை), காதர் (ஒடையகுளம்), இந்துமதி (வேட்டைக்காரன்புதூர்), கதிர்வேல் (கோட்டூர்), அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்களான சுந்தரம் (கிழக்கு), கார்த்திக் அப்புசாமி (மேற்கு), கூட்டுறவு சங்க தலைவர்களான பழனியூர் ஆறுமுகம், பாபு என்கிற வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story