விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது


விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 10 Feb 2019 4:45 AM IST (Updated: 10 Feb 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், கணேசன், ஏட்டுகள் சந்தோஷ்குமார், மணிமாறன், ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததோடு கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று துருவி, துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள் விக்கிரவாண்டி தாலுகா பனையபுரம் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த சகாயராஜ் மகன் லியோபால் (வயது 31), கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் மகாதேவன் (25) என்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில் இவர்கள் இருவரும் சேர்ந்து விழுப்புரம் பகுதியில் இரவு நேரங்களில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து லியோபால், மகாதேவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 13 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் திருட பயன்படுத்திய 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரிந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் கும்பகோணம் தாலுகா வலங்கைமான் தண்டாளம் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜா (31), உளுந்தூர்பேட்டை தாலுகா இருந்தை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் ஸ்டாலின் (25) என்பதும், இவர்கள் இருவரும் விழுப்புரம் பகுதியில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜா, ஸ்டாலின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சத்து 60 ஆயிரமாகும்.

பின்னர் கைதான 4 பேரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த நகை, பணம், வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story