எம்.எல்.ஏ.க்களை சிறைவைத்துள்ளனர் குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா எதிர்ப்பு கர்நாடக சட்டசபையில் கடும் அமளி


எம்.எல்.ஏ.க்களை சிறைவைத்துள்ளனர் குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா எதிர்ப்பு கர்நாடக சட்டசபையில் கடும் அமளி
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 9:19 PM GMT)

எம்.எல்.ஏ.க்களை சிறைவைத்துள்ளனர் என்ற குமாரசாமியின் பேச்சுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து பேசியதால், கர்நாடக சட்டசபையில் கடும் அமளி உண்டானது. இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று குதிரைபேர ஆடியோ விவகாரம் குறித்த சிறப்பு விசாரணை குழு விசாரணை தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

தவறு நடைபெறாது

அப்போது ஆடியோ உரையாடல் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணையை கைவிட வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பதிலளிக்கையில் கூறியதாவது:-

அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படும் அமைப்புகளுக்கு இந்த சபை அதிக பலம் கொடுக்க வேண்டுமே தவிர, அதை பலவீனப் படுத்தக்கூடாது. அரசு நடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அரசின் நடைமுறை மாறுவது இல்லை. சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தினால் எந்த தவறும் நடைபெறாது.

பழிவாங்கும் அரசியல்

விசாரணை எந்த பாரபட்சமும் இல்லாமல் நடைபெறும். சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு சொல்லவில்லை. சபாநாயகர் தான் கூறி இருக்கிறார். அதை ஏற்று முதல்-மந்திரி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கு பா.ஜனதாவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். எந்த விசாரணை வேண்டுமானாலும் நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்- மந்திரி கூறினார். பழிவாங்கும் அரசியல் செய்யும் நோக்கம் முதல்-மந்திரிக்கு இல்லை.

இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே பேசினார்.

பேச்சுகளுக்கு என்ன அர்த்தம்

அப்போது மீண்டும் பேசிய பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார், “எங்கள் கட்சியின் பண்ட்வால் தொகுதி எம்.எல்.ஏ. விமானத்தில் பெங்களூரு வந்தார். அவரது பக்கத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அமர்ந்திருந்தார். இந்த ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த உள்ளதாக அவர் கூறினாராம்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், “இதுபோன்ற பேச்சுகளுக்கு என்ன அர்த்தம் உள்ளது?. சிறப்பு விசாரணை குழு விசாரணை அறிவிக்கப்படுவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பதுபோல் ஆகிவிடும். இது ரூ.50 கோடி லஞ்ச புகாரை விட பெரிய புகார் ஆகும். அரசின் பேச்சை நான் கேட்கிறேன் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுவேன்” என்றார். சுரேஷ்குமாரின் பேச்சுக்கு ஆளுங்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திறந்த மனதுடன் விசாரணை

அப்போது பேசிய குமாரசாமி, “நான் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட மாட்டேன். திறந்த மனதுடன் விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர் மாதுசாமி குறுக்கிட்டு, முதல்-மந்திரி ஆடியோ விவகாரத்தை விட்டு வேறு விஷயங்களை பேசுகிறார். இதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார், “பா.ஜனதா உறுப்பினர்கள் சிலர் பேசும்போது, வேறு விஷயங்கள் குறித்தும் பேசினர். ஆடியோ விவகாரத்தில் சித்தராமையாவின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று பேசினர்” என்றார்.

கடும் அமளி

மீண்டும் குறுக்கிட்டு பேசிய குமாரசாமி, “எங்கள் அரசை பா.ஜனதாவினர் சந்தேகப்படுகிறார்கள். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை மும்பைக்கு அழைத்துச் சென்று பிடித்து வைத்துள்ளனர்” என்றார்.

குமாரசாமியின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எழுந்து நின்று பா.ஜனதாவுக்கு எதிராக பேசினர். இதனால் சபையில் கடும் அமளி உண்டானது. இதையடுத்து சபை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

Next Story