எம்.எல்.சி. பதவி வழங்க ரூ.25 கோடி கேட்டது குறித்து எந்த விசாரணைக்கும் தயார் சட்டசபையில் குமாரசாமி பேச்சு


எம்.எல்.சி. பதவி வழங்க ரூ.25 கோடி கேட்டது குறித்து எந்த விசாரணைக்கும் தயார் சட்டசபையில் குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2019 11:30 PM GMT (Updated: 12 Feb 2019 9:41 PM GMT)

எம்.எல்.சி. பதவி வழங்க ரூ.25 கோடி கேட்டது குறித்து எந்த விசாரணைக்கும் தயார் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

எம்.எல்.சி. பதவி வழங்க ரூ.25 கோடி கேட்டது குறித்து எந்த விசாரணைக்கும் தயார் என்று குமாரசாமி கூறினார்.

சென்று வாருங்கள்

கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி, எம்.எல்.சி. பதவி வழங்க பணம் கேட்டு பேரம் பேசிய விவகாரத்தை பா.ஜனதாவினர் எழுப்பினர். அதற்கு குமாரசாமி பதிலளித்து கூறியதாவது:-

தேவதுர்காவில் தங்கிய பா.ஜனதா தலைவர், எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் மகனுக்கு நள்ளிரவு 12 மணிக்கு 25 முறை போன் செய்துள்ளார். அப்ேபாது அவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். சென்று வாருங்கள் என்று அவரிடம் நான் கூறினேன்.

நம்பிக்கை இல்லை

இரவு 12 மணிக்கு கதவை திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தனர். இந்த சபையில் இந்த ஆடியோ விவகாரம் பற்றி நாள் முழுவதும் விவாதம் நடைபெற்றது. நான் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை, சிறப்பு விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை, பழி வாங்கும் அரசியலை செய்கிறார்கள் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் பேசினர். நான் எப்போதும் பழிவாங்கும் அரசியலை நடத்தியது இல்லை.

ரூ.25 கோடி கேட்டது...

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து நான் முதல்-மந்திரியாக இருந்தேன். அப்போது நான் பதவி ஏற்ற 2 மாதங்களில் என் மீது ரூ.150 கோடி லஞ்ச புகார் கூறப்பட்டது. மந்திரியாக இருந்த ஒருவர், எனக்கு எதிராக கொலை முயற்சி புகாரை கூறினார்.

ஆனால் நான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது இல்லை. தற்போது பா.ஜனதாவில் உள்ள விஜூகவுடாவிடம் ரூ.25 கோடி நான் கேட்டது குறித்து இங்கே பிரச்சினை கிளப்புகிறார்கள். இதை பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். இதை கண்டு தப்பிஓட மாட்டேன்.

கட்சிக்கு நிதி கேட்டேன்

இது கடந்த 2014-ம் ஆண்டு நடந்த விவகாரம். பா.ஜனதாவின் ஆடியோ விவகாரத்திற்கும், இதற்கும் தொடர்பு கிடையாது. என் மீதான புகார் குறித்து உங்களின் மத்திய அரசு மூலம் எத்தகைய விசாரணையும் நடத்துங்கள். அதற்கு நான் தயாராக உள்ளேன். இது எங்கள் கட்சிக்குள் நடந்த விவகாரம். நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள்?.

விஜூகவுடா எங்கள் கட்சியில் இருந்தார். எங்களது கட்சி, மாநில கட்சி. வருமான வரியை கட்டுகிறோம். அனைத்து ஆவணங்களும் வைத்துள்ளோம். நீங்கள் அரசியல் கட்சியாக என்ன செய்கிறீர்களோ?, அதை தான் நாங்களும் செய்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் பணம் கேட்கவில்லை. கட்சி பணிகளுக்கு தான் நிதி கேட்டேன். அதனால் எங்கள் கட்சி விவகாரத்தை, ஆடியோ விவகாரத்துடன் ஒப்பிட வேண்டாம்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story