ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது பல்வேறு தரப்பினர் வரவேற்பு


ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது பல்வேறு தரப்பினர் வரவேற்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 10:00 PM GMT (Updated: 13 Feb 2019 7:05 PM GMT)

ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சிறப்பு நிலை நகராட்சி என்ற அந்தஸ்திலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்ட வடிவ மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். ஓசூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதை பல்வேறு தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

மாவட்ட சிறு, குறுந் தொழிற்சாலைகள் சங்க தலைவரும்(கிரிடிஸ்டியா), ஓசூரை சேர்ந்த தொழிலதிபருமான கே.ராமலிங்கம் கூறுகையில், தமிழ்நாடு அரசு, ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளுக்கு நிர்ணயிக்கப்படும் வரிகளுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று கூறினார்.

ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க தலைவர்(ஹோஸ்டியா) வேல்முருகன் கூறுகையில், ஓசூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம், அடிப்படை கட்டமைப்புகள், சுகாதாரம் சார்ந்த சேவைகள், கல்விக்கூடங்கள், போன்றவை மாவட்ட தலைநகருக்கு இணையாக தரம் மற்றும் வசதிகளுடன் அமைய வாய்ப்புள்ளது.

தமிழக அரசு உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்கி, மாநகராட்சிக்கு உரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். எக்காரணத்தை கொண்டும், தொழில் வரி போன்றவற்றை உயர்த்தக்கூடாது. மேலும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடியிருப்பு வசதிகள், வணிக வளாகங்கள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்றார்.

தனியார் நிறுவன ஊழியர் ஜி.ரமேஷ் கூறியதாவது:- ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. ஓசூர் நகருக்கு உடனடியாக ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வெளியூர் பஸ்களை நிறுத்துவதற்கு ஒரு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இல்லத்தரசி ஷமிம் சுல்தானா கூறியதாவது:- ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம், அதே நேரத்தில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் சீரான முறையில் வினியோகிக்கப்பட வேண்டும். மக்கள் மீது அதிக வரிச்சுமையை திணிக்கக் கூடாது என்றார்.

Next Story