குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலமாக குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

25 ஆண்டு பழமை வாய்ந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பழுதடைந்து காணப்பட்டது. எனவே அதனை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் பேரிட்டிவாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் வினியோகம் சரியாக இல்லாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை பேரிட்டிவாக்கம் – ஊத்துக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான மின்வினியோகத்திற்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பேரிட்டிவாக்கம்– ஊத்துக்கோட்டை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story