தம்பிதுரை என் சகோதரர் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை கோவையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தம்பிதுரை என் சகோதரர் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை கோவையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2019 10:45 PM GMT (Updated: 14 Feb 2019 7:34 PM GMT)

பாரதீய ஜனதா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தம்பிதுரை என் சகோதரர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-மந்திரி நாராயணசாமி போராட்டம் நடத்துவது, தேர்தல் வருவதற்கான அறிகுறி. தேர்தல் வரும்போது இது போல நடக்கும். தமிழகத்தை மிக முக்கியமான மையமாக பாரதீய ஜனதா கட்சி நினைக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது.

பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிக்கொண்டுள்ளோம். அது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

‘கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தம்பிதுரை மத்திய அரசுக்கு எதிராக பேசி இருப்பது, கூட்டணியை பாதிக்காதா?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த, பொன்.ராதாகிருஷ்ணன், ‘தம்பிதுரை எனக்கு நெருங்கிய சகோதரர். தினமும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். பா.ஜ.க கட்சிக்கு கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும் என்று அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியது சரியாக இருக்கும் என்றார்.

‘கூட்டணிக்காக சில கட்சிகள் தே.மு.தி.க. காலில் விழுவதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளாரே?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘விழுந்தவர்கள் பலம் உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு தூணோடு, இன்னொரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒரு தூணில் இன்னொரு தூண் விழுந்தால், அது பலம் அல்ல’ என்றார்.

Next Story