பெரம்பலூர்- அரியலூரில் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர்- அரியலூரில் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:30 AM IST (Updated: 16 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்- அரியலூரில் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

கட்டுப்பாடு இல்லாத வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் வாங்க கோரியும், புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். மல்லீஸ்குமார், செல்வக்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அழகர்சாமி, தலைவர் அகஸ்டின், துணை செயலாளர் ராஜகுமாரன், துணைத் தலைவர் கணேசன், சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு. பொது தொழிலாளர் சங்கத்தின் முத்துசாமி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் ரெங்கசாமி, உடும்பியம் சர்க்கரை ஆலை சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய- மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் முழுமையாக 100 நாள் வேலை கொடுக்க வேண்டும். வேலை செய்த நாட்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட வேண்டும். ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறைகளை தண்ணீர் வசதியுடன் உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.

பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தத்தில் சிறுநீர் கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும். ஆண்டிமடம் வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தேவையான உயிர் காக்கும் மருந்து ஊசியும் இல்லை எனக்கூறி ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து 24 மணி நேரமும் மருத்துவ வசதி கிடைத்திட ஆவன செய்திட வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் உடனடியாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story