கேளம்பாக்கம் பஸ் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி


கேளம்பாக்கம் பஸ் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 16 Feb 2019 10:30 PM GMT (Updated: 16 Feb 2019 6:20 PM GMT)

கேளம்பாக்கம் பஸ் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். அவற்றை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஆஸ்பத்திரிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கேளம்பாக்கம் பஸ்நிலையம் அருகே தபால் நிலையத்தையொட்டி தனியாருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது.

இங்கு சீமைக்கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்துள்ளன. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இந்த காலி நிலத்தில் கொட்டப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அந்த பகுதியில் சிறுநீர் கழிக்கின்றனர். அங்கு குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகள், தபால் நிலையம் வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஒரு சில நேரங்களில் குப்பை கழிவுக்கு சிலர் திடீரென தீ வைத்து விடுவதால் புகை மூட்டம் ஏற்படுகிறது.

இதனால் இதையொட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களை கரும்புகை சூழ்ந்து விடுவதால் அங்கு இருப்பவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இங்குள்ள குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story