வேளாங்கண்ணி அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


வேளாங்கண்ணி அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 7:13 PM GMT)

வேளாங்கண்ணி அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் ரேஷன் கடை உள்ளது. இதனால் அந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். அருகில் குளம் உள்ளதால் மக்கள் அங்கு குளிப் பதற்கு, குடிநீர் தொட்டியை கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் குடிநீர் தொட்டி எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக குடிநீர் தேக்க தொட்டியை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story