பூலாம்வலசுவில் சேவல் சண்டை முடிவடைந்தது


பூலாம்வலசுவில் சேவல் சண்டை முடிவடைந்தது
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசுவில் 3 நாட்கள் நடைபெற்ற சேவல் சண்டை முடிவடைந்தது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம் வலசு கிராமத்தில் ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே தொன்று தொட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக பொழுதுபோக்கிற்காகவும், வீரவிளையாட்டாகவும் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டதன் காரணமாக, சேவல் சண்டை நடத்த மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இதனால் கடந்த 4 ஆண்டுகளாக சேவல் சண்டை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி வழங்கியதையடுத்து, கடந்த 15-ந்தேதி பூலாம்வலசுவில் சேவல் சண்டை தொடங்கியது. நேற்று முன்தினம் 2-வது நாளாக சேவல் சண்டை நடந்தது. இதையடுத்து கடைசி நாளான நேற்றும் சேவல் சண்டை நடந்தது. இதில் கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சேவல்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து மைதானத்தில் ஆங்காங்கே இரண்டு சேவல்களை மோத விட்டு சண்டைகள் நடந்தன. அப்போது சேவல்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டது. இந்த சேவல் சண்டையை பார்வையாளர்கள் கண்டுகளித்து, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மைதானத்திற்கு சேவல்களை கொண்டு வந்தவர்களை வரிசையாக நிற்க வைத்து, சோதனை செய்த பிறகே போலீசார் உள்ளே அனுமதித்தனர். 3 நாட்கள் நடந்த சேவல் சண்டை நேற்றுடன் முடிவடைந்தது. சேவல் சண்டையையொட்டி அரவக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story