3 நாட்கள் நடக்கும் கோலாகல விழா திருமகூடலு திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கி வைத்தார்

திருமகூடலுவில் 3 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. மேளம் அடிப்பதன் மூலம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா கும்பமேளாவை தொடங்கி வைத்தார்.
மைசூரு,
திருமகூடலுவில் 3 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. மேளம் அடிப்பதன் மூலம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா கும்பமேளாவை தொடங்கி வைத்தார்.
திருமகூடலு திரிவேணி சங்கமம்
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் திருமகூடலு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3 நதிகள் சங்கமிக்கிறது. புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தை நமது முன்னோர்கள் திரிவேணி சங்கமம் என்று அழைத்து வந்தனர்.
அதுபோல இந்த இடம் திருமகூடலு திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது குடகு மாவட்டம் தலைக்காவிரியில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு, ஹாசன், மண்டியா, மைசூரு ஆகிய பகுதிகளை கடந்து திருமகூடலுவில் சேருகிறது. அதுபோல கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் கபிலா ஆறும் திருமகூடலு சங்கமத்தில் கலக்கிறது. இந்த 2 ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் குப்தகாமினி என்ற நதி பிறக்கிறது. இந்த 3 ஆறுகளும் ஒன்றாக சங்கமிக்கும் இடம் திருமகூடலு திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
மகா கும்பமேளா
வடமாநிலங்களில் உள்ள திரிவேணி சங்கமங்களில் அடிக்கடி மகா கும்பமேளா நடைபெறுவது உண்டு. அங்கு செல்ல முடியாத தென்இந்திய மக்களுக்காக திருமகூடலு திரிவேணி சங்கமத்தில் கடந்த 1989-ம் ஆண்டு முதன்முறையாக கும்பமேளா நடத்தப்பட்டது. அதன்பின்னர் 10 முறை திருமகூடலுவில் மகா கும்பமேளா நடந்து உள்ளது. கடைசியாக 2016-ம் ஆண்டு மகா கும்பமேளா நடந்து இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி(அதாவது நேற்று) முதல் 19-ந் தேதி வரை 3 நாட்கள் திருமகூடலு திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளை மைசூரு மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது.
காலை முதலே பக்தர்கள் வருகை
அதன்படி 3 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளா விழா நேற்று திருமகூடலுவில் கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
பக்தர்களின் வசதிக்காக அங்கு கம்புகள் மூலம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக பாலங்கள் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்கள் உடைமாற்றும் அறை, தங்குமிடம், தற்காலிக கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மந்திரி தொடங்கிவைத்தார்
மேலும் மருத்துவ சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அங்கு நீச்சல் வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கும்பமேளாவின் தொடக்க விழா நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றியும், மேளம் அடித்தும் விழாவை ெதாடங்கிவைத்தார்.
இரவிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். புனித நீராடிய பக்தர்கள் நதிக்கரைகளில் உள்ள குஞ்சா நரசிம்ம சுவாமி, அகஸ்தீஸ்வரர் சுவாமி, பசவேஸ்வரர் சுவாமி, ஆஞ்சநேயர் சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மவுன அஞ்சலி
இதனை தொடர்ந்து நேற்று மாலையில் திருமகூடலுவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் மந்திரி ஜி.டி.தேவேகவுடா, யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ., துருவநாராயண் எம்.பி., மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், பல்வேறு மடத்தின் மடாதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேசுகையில், வட இந்தியாவில் கும்பமேளா நடந்து வருகிறது. அங்கு செல்ல முடியாத தென்இந்தியா மக்கள் வசதிக்காக திருமகூடலுவில் கும்பமேளா நடத்தப்பட்டு வருகிறது. இந்த கும்பமேளா விழாவை அமைதியான முறையில் நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
கங்கா ஆரத்தி
விழாவின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு 3 ஆறுகளுக்கும் கங்கா ஆரத்தி மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் மந்திரி புட்டரங்கஷெட்டி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, எம்.எல்.ஏ.க்கள் தன்வீர் சேட், நாகேந்திரா, ஹர்ஷவர்தன், அனில் சிக்கமாது உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
விழாவின் இறுதி நாளான நாளை நடக்கும் கும்பமேளாவில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
பலத்த பாதுகாப்பு
கும்பமேளாவையொட்டி திருமகூடலு விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story