திப்பம்பட்டியில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


திப்பம்பட்டியில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:15 PM GMT (Updated: 18 Feb 2019 1:53 PM GMT)

திப்பம்பட்டியில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பன்னிகுளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், திப்பம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ்நிலையத்தில் 24 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பஸ்நிலைய பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடந்து 1½ ஆண்டுகள் ஆகியும் இந்த பஸ்நிலையம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இங்கு கட்டப்பட்டுள்ள கடைகள் பயன்பாடின்றி உள்ளன.

இந்த பஸ்நிலையம் மற்றும் கடைகள் பகல், இரவு என அனைத்து நேரத்திலும் குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது. இந்த பஸ்நிலையத்திற்குள் எப்போதும் குடிகாரர்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் இங்கு நிழலுக்கு கூட ஒதுங்க பயப்படுகிறார்கள். இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த புதிய பஸ்நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஒரு வங்கியில், மகளிர் குழுக்களுக்கான கடனுதவியை பெற்றோம். அந்த தொகையை மீண்டும் செலுத்தி விட்டோம். இந்தநிலையில் எங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மேற்கொண்டு கடனுதவி பெற முடியாததால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தாசரஅள்ளி பகுதியை சேர்ந்த மக்கள் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். இங்கு செயல்படும் ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுப்புற சூழல் மாசுபாடு அடைகிறது. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கால்நடைகள் மற்றும் நிலத்தடி நீரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி அந்த தனியார் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தினர் கொடுத்த மனுவில், மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையான செயல்பாடு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளை உறுதி செய்ய வாக்குசீட்டில் வாக்களிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.


Next Story