வி.ஐ.டி. ரிவேரா நிறைவு விழா: எதையும் தன்னம்பிக்கையுடன் கையாண்டால் வெற்றிபெறலாம் நடிகை சுருதிஹாசன் பேச்சு


வி.ஐ.டி. ரிவேரா நிறைவு விழா: எதையும் தன்னம்பிக்கையுடன் கையாண்டால் வெற்றிபெறலாம் நடிகை சுருதிஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2019 3:00 AM IST (Updated: 19 Feb 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

வி.ஐ.டி. ரிவேரா நிறைவு விழாவில் நடிகை சுருதிஹாசன் கலந்துகொண்டு பரிசு வழங்கி பேசினார். அப்போது எதையும் தன்னம்பிக்கையுடன் கையாண்டால் வெற்றிபெறலாம் என்று கூறினார்.

வேலூர், 

வேலூர் வி.ஐ.டி.யில் ரிவேரா என்ற சர்வதேச கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு விழா கடந்த 14-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உள்நாட்டில் இருந்தும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் 700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 38 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு நீச்சல், வாலிபால், தடகளம், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16 விளையாட்டு போட்டிகளும், நடனம், நாட்டியம், நாடகம், ஓரங்க நாடகம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை, கட்டுரை போட்டிகள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், விவாத அரங்கம், வடிவமைப்பு, தமிழ், ஆங்கிலம் குறும்படம் தயாரித்தல் என 129 நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.20 லட்சம், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ரிவேரா நிறைவு விழாவுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் தலைமைதாங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகை சுருதிஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிவேராவில் நடத்தப்பட்ட கலை போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கும், விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கும் கோப்பைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வி.ஐ.டி. விழாவில் மாணவ-மாணவிகளை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்க்கையில் எதையும் நல்லதாகவும், தன்னம்பிக்கையுடனும் கையாண்டால் வெற்றி நிச்சயம். சாலை விதிகளை நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வாகனம் ஓட்ட தெரியவில்லை என்றால் வண்டி ஓட்டவேண்டாம். அதேபோல குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வி.ஐ.டி. செயல் இயக்குனர் சந்தியாபெண்ட்டரெட்டி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், மாணவர் நலன் இயக்குனர் அமித்மகேந்திரக்கர், ரிவேரா ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் மாணவர் அமைப்பு குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story