சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பொதுமக்கள் பீதி


சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 19 Feb 2019 3:00 AM IST (Updated: 19 Feb 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சேலம், 

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே அவ்வை நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்வினியோகம் செய்வதற்காக டிரான்ஸ்பார்மார் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். இந்தநிலையில் நேற்று மாலை டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் குப்பையும் தீப்பிடித்து எரிந்தது.

பின்னர் சிறிது நேரத்தில் கரும்புகை வெளியேறியது. இதை சிலர் ஆபத்தை அறியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர்.

மேலும் டிரான்ஸ்பார்மர் அருகில் வேறு யாரும் சென்று விடாமல் இருக்கும் வகையில் சாலையில் கற்கள் போட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனிடையே ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டுவிடுமோ? என்ற பயத்தில் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் பீதி அடைந்து வெளியே வந்தனர். தீ அணைக்கப்பட்ட பின்பு பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தீயில் எரிந்த டிரான்ஸ்பார்மர் இன்று (செவ்வாய்க் கிழமை) சரிசெய்யப்படும் எனவும், இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வேறு டிரான்ஸ்பார்மர் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் வெளியேறி, அது குப்பையில் விழுந்ததில் வெயில் காரணமாக தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story