திருச்சி மாவட்டத்தில் ‘மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாண முக்கியத்துவம் அளிப்பேன்’ புதிய கலெக்டர் பேட்டி


திருச்சி மாவட்டத்தில் ‘மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாண முக்கியத்துவம் அளிப்பேன்’ புதிய கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 9:52 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிப்பேன் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்ற எஸ்.சிவராசு கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ராஜாமணி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கோவை வணிக வரிகள் துறை இணை கமி‌ஷனராக(செயலாக்கம்) பணியாற்றி வந்த எஸ்.சிவராசு திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2004–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை திருச்சியில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்ட புதிய கலெக்டராக எஸ்.சிவராசு நேற்று மதியம், திருச்சி கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய கலெக்டர் என்பதால், அவரை சந்திக்க வந்த அதிகாரிகள் பலர் பூச்செண்டு, பழங்கள் கொண்டு வந்திருந்தனர். ஆனால், அவற்றை ஏற்க மறுத்த கலெக்டர் சிவராசு, அவர்களுடன் கைகுலுக்கியதுடன் பெயர் மற்றும் பணியாற்றும் துறையை கேட்டறிந்தார்.

பின்னர் தரைத்தளம் வந்த அவர், அங்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் நவீன எந்திரமான வி.வி.பேட் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டிருந்த முகாம் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தில் நடந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அப்போது நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

முன்னதாக கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருச்சி மாவட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதி மற்றும் சுகாதார வசதிகளுக்கு தீர்வுகாண அதிக முக்கியத்துவம் அளிப்பேன். மேலும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்லவும் பாடுபடுவேன்’’ என்றார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் சிவராசுக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம். தந்தை பெயர் சுப்பையன். கடந்த 2004–ம் ஆண்டு திருச்சி வருவாய் கோட்டாட்சியராக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியராகவும், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும்(பொது), காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், மதுரை மாநகராட்சியில் துணை ஆணையராகவும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் துணை ஆணையராகவும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் வணிகவரித்துணை இணை கமி‌ஷனர்(செயலாக்கம்)ஆகவும் பணியாற்றிய அவர், நேற்று திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2011–ம் ஆண்டு பதவி மூப்பின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ். அந்தஸ்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story