உதவித்தொகை பெறுவதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் பெயர் சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் விண்ணப்பங்களை கொடுக்க அரசு அலுவலகங்களில் குவிந்தனர்

உதவித்தொகையை பெறுவதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு ஆர்வமாக சென்று விண்ணப்பங்களை கொடுத்து வருகிறார்கள்.
ஈரோடு,
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கக்கோரி பொதுமக்கள் பலர் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று விண்ணப்பங்களை கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக பெண்கள் அதிகமாக வந்திருந்தனர். அவர்கள் தங்களது பெயர், ரேஷன் கடை எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை மனுவாக எழுதி கொடுத்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் பலர் விண்ணப்பங்களை கொடுத்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து பெயர், ரேஷன் கார்டு எண், ஆதார் எண், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக வாங்கி கொள்கிறோம். அதன்பிறகு விண்ணப்பம் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்திவிட்டு, தகுதி உடையவராக இருந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் பெயர் சேர்க்க பரிந்துரை செய்யப்படும்.
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலேயே விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பங்களை கொடுக்கலாம். இதேபோல் மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story