போரூரில் என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
போரூரில், சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
பூந்தமல்லி,
சென்னை போரூர் சபரி நகர், 2-வது மெயின்ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரைதள வீட்டில் வசித்து வருபவர் ராஜகோபால்(வயது 35). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நர்மதா.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜகோபால், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார்.
50 பவுன் கொள்ளை
அங்கு சாமி தரிசனம் முடிந்து நேற்று மதியம் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. ராஜகோபால் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்த மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.
பழைய குற்றவாளிகளா?
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார், திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்த போலீசார், அது பழைய குற்றவாளிகளுடன் ஒத்துப்போகிறதா? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆராய்ந்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story