பள்ளிகொண்டாவில் காளை விடும் திருவிழா 35 பேர் காயம்


பள்ளிகொண்டாவில் காளை விடும் திருவிழா 35 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Feb 2019 3:45 AM IST (Updated: 25 Feb 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டாவில் காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 35 பேர் காயம் அடைந்தனர்.

அணைக்கட்டு, 

பள்ளிகொண்டா யாதவத் தெருவில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. மாவட்ட உதவி ஆணையர் பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் ஹெலன்ராணி, ஆவின் தலைவர் வேலழகன் ஆகியோர் கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனர். மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் தேவிகலா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட காளைகளை பள்ளிகொண்டா கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து 107 காளைகளுக்கு அனுமதி வழங்கினர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். பெண்களும் குழந்தைகளும் வீட்டின் மாடிகளில் நின்றுபார்த்து ரசித்தனர்.

ஓடும் பாதையில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். இதையொட்டி ஆம்பூர் துணை போலீஸ்சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கோகுல்ராஜ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்னேஷ், செல்வகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசு ரூ.80 ஆயிரம், 3-வது பரிசு ரூ.60 ஆயிரம் உள்ளிட்ட 47 பரிசுகள் வழங்கப்பட்டது.

ஓடும் பாதையில் விழுந்து 2 காளைகள் காயமடைந்தன. அதற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விழா ஏற்பாடுகளை காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த வினோத்குமார், அசோக்குமார், முருகன், குருநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story