15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 9 இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்யக்கோரியும், சாலை பணியாளர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய மாற்றம் செய்து தர வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அய்யனார், இணை செயலாளர் தண்டபாணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதேபோல் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், செஞ்சியில் வட்டார தலைவர் செல்வக்குமார் தலைமையிலும், வல்லத்தில் வட்ட செயலாளர் செந்தில்ராஜன் தலைமையிலும், மேல்மலையனூரில் வட்ட செயலாளர் காஞ்சனா தலைமையிலும், தியாகதுருகத்தில் வட்ட செயலாளர் கொளஞ்சி வேல் தலைமையிலும், கள்ளக்குறிச்சியில் வட்ட செயலாளர் ஜோசப் தலைமையிலும், சின்னசேலத்தில் மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமையிலும், திருக்கோவிலூரில் வட்ட தலைவர் குணசேகர் தலைமையிலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story