கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை, ரூ.30 லட்சம் கேட்டு கலெக்டருக்கு கடிதம் எழுதிய தொழிலாளி சிக்கினார்

ரூ.30 லட்சம் கேட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பிய குமரி தொழிலாளி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலி அரசு முத்திரைகள் வைத்திருந்ததாக அவரை கைது செய்தனர்.
திருவட்டார்,
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே திருவரம்பு கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). தொழிலாளி. இவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், கூடங்குளம் அனுமின்நிலையம் அமையும்போது அரசுக்கு சாதகமாக செயல்பட்டு, பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து அனுமின்நிலையம் அமைப்பதற்கு காரணமாக இருந்தேன். அதற்கு அரசு தனக்கு ரூ.30 லட்சம் உதவித்தொகை அறிவித்தது. ஆனால், அந்த பணம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை. எனவே அந்த பணத்தை பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தூத்துக்குடி கலெக்டர், கடிதம் எழுதிய நடராஜன் யார்? என்பது பற்றி விசாரணை நடத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்திருந்தார். போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து விசாரணை நடத்தும்படி திருவட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருவட்டார் போலீசார் திருவரப்பு கொல்வேல் பகுதிக்கு சென்று நடராஜனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தன்னை என்ஜினீயர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். தூத்துக்குடி கலெக்டருக்கு நான் தான் கடிதம் அனுப்பினேன். நடராஜனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரது வீட்டை சோதனை செய்தனர். இந்த சோதனையில், போலி அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் பேடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் பயன்படுத்தப்படும் ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவை இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 10-ம் வகுப்பு வரை படித்த அவர் என்ஜினீயர் என்றும் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக கூறினார். தொடர்ந்து போலீசார், போலி அரசு முத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடராஜனுக்கு, அரசு முத்திரைகள் எப்படி கிடைத்தது, இதை பயன்படுத்தி யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story