பெங்களூரு நிமான்ஸ் இயக்குனர் அலுவலகம் முற்றுகை: ஊழியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் இயக்குனர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் (நிமான்ஸ்) மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று அதன் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், விதிமுறைகளின்படி தனித்தனி துறைகளை பிரித்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும், விதிகளின்படி நர்சு பணியிடங்களை உருவாக்க வேண்டும், ஊழியர்களின் தர ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நர்சுகளை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த முற்றுகை போராட்டத்தால் நிமான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உள்பட போலீசார் அங்கு வந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த மருத்துவமனை இயக்குனர், ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார். அவரிடம் ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story