திருப்பாலைக்குடி, பெருநாழியில் கூட்டுறவு வங்கி கிளைகள் - அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்

கூட்டுறவு சங்கங்களின் புதிய கட்டிடங்கள் மற்றும் வங்கி கிளையினை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம்,
கூட்டுறவு துறையின் மூலம் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் வங்கி பணிகளுக்காக கூடுதல் கணினிகளுடன் நவீனப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும், சிகில்ராஜ வீதி பகுதியில் கூட்டுறவு நகர வங்கிக்காக ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடத்தினையும், பரமக்குடி அருகே வெங்கிட்டன்குறிச்சி சாலை பகுதியில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 500 டன் கொள்ளளவு கொண்ட வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க தானிய சேமிப்பு கிடங்கினையும் அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
இதேபோல திருப்பாலைக்குடியில் நடைபெற்ற விழாவில் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் நிதியில் மத்திய கூட்டுறவு வங்கியின் திருப்பாலைக்குடி மற்றும் பெருநாழி ஆகிய கிராமங்களுக்கான புதிய வங்கி கிளைகளையும் அமைச்சர் திறந்து வைத்தார். விழாக்களில் அவர் பேசியதாவது:-
மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டுமல்லாது கால்நடை வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற பல்வேறு விதமான கடனுதவிகளும், வீட்டுவசதி கடன், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன், தாட்கோ, டாம்கோ போன்ற அரசு திட்டங்களின் கீழ் கடனுதவிகள், பணிபுரியும் மகளிருக்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வங்கி கிளைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வணிக வங்கிகளுக்கு நிகராக இணைய பண பரிமாற்றம், மின்னணு பண பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தங்களது வங்கி கணக்கில் மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றம் தொடர்பாக குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.
இதுதவிர பரமக்குடி பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 50 டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிடங்கானது இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகேசன், துணைப் பதிவாளர்கள் கணேசன், வெங்கடாசலபதி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் ராமமூர்த்தி, பரமக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைவர் ஜமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவை கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
இந்த எந்திரத்தின் மூலம் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக பரிசோதிக்க முடியும். இதேபோல மூளையில் ஏற்படக்கூடிய மிகச்சிறிய அளவிலான ரத்த கசிவினை கூட துல்லியமாக கண்டறிய முடியும். இக்கருவியானது எனது முழு முயற்சியினால் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் தாய்-சேய் நல பிரிவிற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக வருகை தரும் பொதுமக்கள் நலனுக்காக 10 வெண்டிலேடர் கருவிகள், 8 டயாலிசிஸ் கருவிகள் போன்றவையும், தரம் உயர்த்தப்பட்ட ரத்த வங்கி, பச்சிளம் குழந்தைகளின் நலனுக்காக தாய்ப்பால் வங்கி போன்றவையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் நவீன பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அச்சுந்தன்வயல் தொடங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வழியாக பட்டணம்காத்தான் வரையில் செல்லும் சாலையை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், முதன்மை மருத்துவர் ஞானகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story