ஹாவேரியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் ராகுல்காந்தி இன்று கர்நாடகம் வருகை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்


ஹாவேரியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் ராகுல்காந்தி இன்று கர்நாடகம் வருகை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் ஹாவேரியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

பெங்களூரு, 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் ஹாவேரியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

ராகுல்காந்தி வருகை

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

அவர் கர்நாடகத்தில் தார்வார், கலபுரகி ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

மாநாடு ஏற்பாடுகள்

அவர் ஹாவேரியில் காலை 11 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டு ஏற்பாடு பொறுப்புகளை உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கடந்த 15 நாட்களாக ஹாவேரியில் தங்கி மாநாடு ஏற்பாடுகளை செய்துள்ளார்.

50 ஆயிரம் இருக்கைகள்

மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஹாவேரி, கதக், தார்வார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ராகுல்காந்தி வருகையையொட்டி ஹாவேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் விரைவில் கர்நாடகத்திற்கு வந்து கட்சி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதற்கான முயற்சிகளில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதி பங்கீடு

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. இன்னும் அக்கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story