பனவடலிசத்திரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை போலீஸ் நிலையம் அருகே துணிகரம்

பனவடலிசத்திரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பனவடலிசத்திரம்,
நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் மெயின் ரோட்டில் மேலநரிக்குடியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேஷ் (வயது 27) என்பவர் டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி பொருட்கள் விற்கும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கடையில் இருந்த எல்.சி.டி. டி.வி. 3, ஹோம் தியேட்டர் 2, மிக்ஸி 2 உள்பட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
மேலும் அவரது கடைக்கு அருகே வடக்கு பனவடலிசத்திரம் காலனி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் சவுந்திரபாண்டியன் (44) என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் பூட்டையும் உடைத்து, உள்ளே இருந்த கண்ணாடியை உடைத்து 40 பட்டு சேலைகள், பேண்ட், டீசர்ட் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஜவுளிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜென்னீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அருகே துணிகரமாக அடுத்தடுத்து 2 கடைகளில் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story