கடைக்கு வந்து சிகரெட் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபருக்கு வலைவீச்சு


கடைக்கு வந்து சிகரெட் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 7:14 PM GMT)

பெட்டிக்கடையில் வியாபாரத்தை கவனித்த பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சிகரெட் வாங்குவதுபோல் நடித்து 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த பனிச்சமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் அதே பகுதியில் கிழக்கு கடற்கரைசாலையோரம் பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 28). நேற்று மாலை கமலக்கண்ணன் வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவி தனலட்சுமி கடையில் அமர்ந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் கடை அருகே வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர் ஹெல்மெட்டை கழற்றாமலேயே சிகரெட் வேண்டும் என்று கடையில் இருந்த தனலட்சுமியிடம் கேட்டார். உடனே தனலட்சுமியும் அவர் கேட்ட சிகரெட்டை எடுத்துக் கொடுத்தார். இந்த நிலையில் திடீரென அந்த நபர் தனலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தார். அதனை எதிர்பார்க்காத தனலட்சுமி அதிர்ச்சியில் நிலை குலைந்தார். உடனே அந்த நபர் நகையுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார். அதிர்ச்சியில் இருந்து மீண்ட தனலட்சுமி “திருடன், திருடன்” என்று அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள், மற்ற கடைக்காரர்கள் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் சங்கிலியை பறித்தவன் தப்பிச் சென்றுவிட்டான்.

இதுகுறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துக் கொண்டு தப்பிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடைக்கு வந்து சிகரெட் வாங்குவதுபோல் நடித்து நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story