குறைவான ஆசிரியர்கள் வருகை: பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர் தர்ணா


குறைவான ஆசிரியர்கள் வருகை: பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர் தர்ணா
x
தினத்தந்தி 19 March 2019 4:15 AM IST (Updated: 19 March 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

குறைவான ஆசிரியர்கள் வருகையை கண்டித்து பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்து பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா மீனவேலியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 135 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் 4 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக 2 ஆசிரியர்கள் மட்டும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை.

போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்வி பயிலும் வழக்கத்தை மறந்தும், குழந்தைகளின் கல்வி தரம் குறைந்துள்ளதாகவும் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட கலெக்டரிடமும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளியை விட்டு வெளியே வந்து விளையாடியுள்ளனர். இதில் 2 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை வகுப்புகளுக்கு அனுப்ப மறுத்து பள்ளியின் முன் திரண்டனர். இதையடுத்து பள்ளியின் உள்ளே பெற்றோர் வரக்கூடாது என தலைமையாசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் பள்ளியின் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வகுப்பறைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story