பட்டிவீரன்பட்டி அருகே, சிமெண்டு மூட்டைகளை திருட வந்த கும்பலை தடுத்த 2 பேருக்கு கத்திக்குத்து -3 பேர் கைது

பட்டிவீரன்பட்டி அருகே சிமெண்டு மூட்டைகளை திருட வந்த கும்பலை தடுத்த 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 40). இவர், பட்டிவீரன்பட்டியில் உள்ள துர்க்கையம்மன் கோவில் தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக வீட்டின் அருகாமையில் உள்ள தற்காலிக ஷெட்டில் சிமெண்டு மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளார்.
இந்தநிலையில் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யன்கோட்டையை சேர்ந்த ரத்தினகுமார் (24), விக்ரம்(23), ஜெயபிரகாஷ் (22), ஜெய்கார்த்திக் (22) ஆகிய 4 பேரும் சேர்ந்து தற்காலிக ஷெட்டில் இருந்து 6 சிமெண்டு மூட்டைகளை திருடி செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த நிர்மலின் நண்பர்கள் விஜய் கமலபதி, மனோஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தடுக்க முயன்ற 2 பேரையும் கத்தியால் குத்தினர்.
இதில் விஜய் கமலபதி, மனோஜ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து விக்ரம், ஜெயபிரகாஷ், ஜெய்கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் தப்பியோடிய ரத்தினகுமாரை போலீசார் தேடி வருகின்றார்.
Related Tags :
Next Story