6 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.20 லட்சம் சிக்கியது - பறக்கும் படையினர் அதிரடி


6 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.20 லட்சம் சிக்கியது - பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 21 March 2019 11:15 PM GMT (Updated: 21 March 2019 5:35 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் 6 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.19 லட்சம் சிக்கியது.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அர்ஜூன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசு பஸ்சை வழிமறித்து அதில் வந்த பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது ஒருவர் வைத்திருந்த பையில் ரூ.8 லட்சத்து 18 ஆயிரத்து 700 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் தியாகதுருகம் ஜின்னா நகரை சேர்ந்த நவீன் (வயது 24) என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், தான் மணிலா வியாபாரி என்றும், ஆந்திராவில் இருந்து மணிலா வாங்கி வந்து தியாகதுருகம் பகுதியில் உடைத்து, பின்னர் அதனை சேலம் கொண்டு சென்று விற்பனை செய்து அதற்குரிய பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும் அதற்குரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் நேற்று காலை சின்னசேலம் அருகே இந்திலி- மேலூர் பாதையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை நடத்தியதில், காரில் வந்த கள்ளக்குறிச்சி எஸ்.ஒகையூரை சேர்ந்த சதீஷ்குமார்(34) என்பவர், ஒரு பையில் ரூ.4 லட்சம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் இந்திலி பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளதாகவும், வியாபாரம் விஷயமாக பணத்தை எடுத்துச்செல்வதாகவும் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரங்கபாஷியம் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்த அக்‌ஷியோ மார்டியா (24), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சந்திரசேகர் (38) ஆகியோரை வழிமறித்து சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அக்‌ஷியோமார்டியா சென்னை கோவிந்தப்பன் நாயக்கர் தெருவில் பிளாஸ்டிக் குழாய்கள், கேபிள் ஒயர் கடை வைத்துள்ளதாகவும், வியாபாரம் விஷயமாக பணத்தை எடுத்துச்செல்வதாகவும் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் பகுதியில் திருக்கனூரை சேர்ந்த அரிகரன் (32) என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500-யும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சகாதேவன்(55) என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், மரக்காணம் அருகே அனுமந்தை பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த சந்திரசேகர் (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொத்தத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று வரை 6 இடங்களில் நடந்த பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையில் ரூ.20 லட்சத்து 11 ஆயிரத்து 200 சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story