இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி கோட்டாட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்


இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி கோட்டாட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 10:40 PM GMT)

பயிர் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க கோரி தேவகோட்டை கோட்டாட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஒன்றியம் பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கியும், இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்றும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அந்த பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் நேரில் சென்று முறையிட்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக காப்பீடு செய்தவர்களின் பணத்தை பிடித்துக்கொண்டு மற்றவர்களுக்கு, இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் அதற்குரிய பணம் கணக்குகளில் வரவு வைக்கப்படாததால், சில நாட்களுக்கு முன்பு வங்கி முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

இந்தநிலையில் இதுநாள் வரை இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும், முறையான பதில் கிடைக்காததால் விவசாயிகள் நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கோட்டாட்சியர் ஈஸ்வரியை முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் மனு கொடுத்தனர். அதில், முறைகேடுகள் இல்லாத விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டதால், இழப்பீட்டு தொகையை கடனுக்காக வரவு வைக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. முற்றுகை போராட்டத்தில் ஆனையடி முத்துராமன், கோடகுடி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story