தொகுதியை விட்டுகொடுத்து எம்.பி.யையும் சிவசேனாவுக்கு தாரை வார்த்த பா.ஜனதா


தொகுதியை விட்டுகொடுத்து எம்.பி.யையும் சிவசேனாவுக்கு தாரை வார்த்த பா.ஜனதா
x
தினத்தந்தி 26 March 2019 11:30 PM GMT (Updated: 26 March 2019 10:17 PM GMT)

தொகுதியை விட்டுகொடுத்து எம்.பி.யையும் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாரைவார்த்து கொடுத்து உள்ளது.

மும்பை, 

தொகுதியை விட்டுகொடுத்து எம்.பி.யையும் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாரைவார்த்து கொடுத்து உள்ளது.

பால்கர் தொகுதி

பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கடந்த மாதம் வரை கடுமையாக மோதிக்கொண்டன. 2 கட்சிகளும் சரமாரியாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தன. குறிப்பாக சிவசேனா, பா.ஜனதாவை எதிர்க்கட்சியை விடவும் அதிகமாக விமர்சித்து வந்தது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக 2 கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம் என அறிவித்தனர்.

பா.ஜனதா 25 தொகுதியிலும், சிவசேனா 23 இடங்களில் போட்டியிடுகின்றன. இதில் பா.ஜனதா கட்சி தற்போது தங்கள் வசம் உள்ள பால்கர் தொகுதியை சிவசேனாவுக்கு விட்டு கொடுத்தது.

சிவசேனாவில் இணைந்தனர்

பால்கரின் எம்.பி.யாக இருந்த சிந்தாமன் வாங்கா கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சிந்தாமன் வாங்காவின் குடும்பத்தினருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ராஜேந்திர காவித்தை வேட்பாளராக நிறுத்தியது. இதையடுத்து சிந்தாமன் வாங்கா குடும்பத்தினர் சிவசேனாவில் இணைந்தனர். சிந்தாமன் வாங்காவின் மகன் ஸ்ரீனிவாஸ் வாங்கா சிவசேனா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த இடைத் தேர்தலில் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட ராஜேந்திர காவித் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

இந்தநிலையில் பால்கர் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டதால் ஸ்ரீனிவாஸ் வாங்கா தான் அங்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

எம்.பி.யும் தாரை வார்ப்பு

இந்தநிலையில் நேற்று ராஜேந்திர காவித் பா.ஜனதாவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இருந்த மேடையிலேயே அவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.

இது குறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கூறுகையில், “பால்கரில் ராஜேந்திர காவித்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. எனவே அவரை சிவசேனா சார்பில் போட்டியிட வைக்க முடிவு செய்தோம். இதுகுறித்து அவர் முதல்-மந்திரியிடம் அனுமதி பெற்ற பிறகுதான் சிவசேனாவில் இணைந்துள்ளார்” என்றார்.

பால்கரில் சிவசேனா சார்பில் ராஜேந்திர காவித் விரைவில் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

Next Story