மேச்சேரி அருகே மண்எண்ணெய் டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மேச்சேரி அருகே, மண்எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேச்சேரி,
சென்னையில் இருந்து மண்எண்ணெய் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நேற்று காலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் மேச்சேரி - மேட்டூர் சாலையில் பொட்டனேரி குள்ளமுடையானூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வந்தபோது நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.
அப்போது டேங்கர் லாரியில் இருந்த மண்எண்ணெய் நடுரோட்டில் கொட்டி பாய்ந்து ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பெங்களூரு- கோவை, சேலம்-மேட்டூர் செல்ல வேண்டிய பஸ், கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அந்த பகுதியில் நீண்ட தூரத்துக்கு வரிசையில் நின்றன.
இதுபற்றி மேச்சேரி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரோட்டின் இருபுறமும் கயிறு கட்டி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு தீயணைப்பு வண்டிகள் வந்தன. ரோட்டில் கொட்டிய மண்எண்ணெய் மீது தீத்தடுப்பு நுரை கலவை நீரை பீய்ச்சி தடுப்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதன்பின்னர் அங்கு 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மண்எண்ணெய் லாரியை தூக்கி சாலையோரம் விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நாசர், வயநாடு பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா, மற்றொரு டிரைவர் பாரூக் பாட்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் நடுரோட்டில் மண்எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story