திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது மடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருக்குறுங்குடி பெரியகுளம் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. இந்த குளத்தின் பழுதடைந்த மடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏர்வாடி,
திருக்குறுங்குடி பெரியகுளம் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. இந்த குளத்தின் பழுதடைந்த மடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம்
ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு திருக்குறுங்குடி நம்பி கோவில் மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் இந்த குளமானது கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால் முழுவதும் நிரம்பியது.
அப்போது குளத்தில் உள்ள 3 மடைகளும் பழுதடைந்திருந்தன. இதில் நடுமடை அருகே உள்ள கரையில் அரிப்பு ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டது. மேலும் குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருந்ததால் பழுதடைந்த மடைகளை சீரமைக்க முடியவில்லை. இதனால் பெரும்பகுதி தண்ணீர் வீணாகி வந்தது. இதை தொடர்ந்து மடை அடைக்கப்பட்டு குளத்திற்கு வரும் தண்ணீர் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. தற்போது இந்த குளம் வறண்டு போய் உள்ளது. மடைகள் சீரமைக்கப்பட்டு இருந்தால் தண்ணீரை முழுமையாக சேகரித்து வைத்திருக்க முடியும்.
கோரிக்கை
இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வறண்டுள்ளது. எனவே அதிகாரிகள் தற்போது பழுதடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும். வரும் காலங்களிலாவது மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைத்து கோடை காலத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story