அ.ம.மு.க.வுக்கு பொது சின்னம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது டி.டி.வி. தினகரன் பேட்டி


அ.ம.மு.க.வுக்கு பொது சின்னம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 30 March 2019 4:45 AM IST (Updated: 30 March 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க.வுக்கு பொது சின்னம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

காஞ்சீபுரம்,

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தின கரன் நேற்று காஞ்சீபுரத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஓய்வெடுக்க காஞ்சீ புரம் வந்தேன். நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணிக்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வந்து சோதனையிட்டனர். இந்த ஆட்சியில் அதிகாரிகள் ஆளும் கட்சியினர் சொல்படி ஆடுகின்றனர்.

முதல்-அமைச்சர் வந்தால் தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகள் அமைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதையெல்லாம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். பெரும்பாலான தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகவே செயல்படுகிறார்கள்.

ஐ.ஏ.எஸ் போன்ற உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் நேர்மையாக நடந்துகொள்வார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அவர்கள்கூட ஆளுங் கட்சியின் சொல்படி நடந்துகொள்கிறார்கள். அ.ம.மு.க. வுக்கு பொது சின்னம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் விதிமீறல் களை ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைகள்தான் வெளிப்படுத்த வேண்டும். முதல்-அமைச்சர் தனது பிரசார கூட்டத்தில் நானும் விவசாயிதான், விவசாயிகள் துன்பங்களை புரிந்தவன் என்கிறார். ஆனால் எட்டு வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் ஏழை, எளிய விவசாயிகள் வீடு, நிலங்களை பறித்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கவைக்கிறார்.

தமிழக அமைச்சர்கள் மோடியை டாடி என்கிறார்கள். மோடியா, லேடியா என்று கேட்டு தனித்து நின்று வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. ஆனால் இன்று மக்கள் ஆதரவு இல்லாமல் அம்மா ஆட்சி என்று கூறிக்கொண்டு விஜயகாந்த் வீட்டுக்கும், ராமதாஸ் வீட்டுக்கும் நடையாய் நடக்கிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார், பரிசுப்பெட்டி சின்னத்தை சவப்பெட்டி என்கிறார். இதையும் நாங்கள் நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம்.

தனிப்பட்ட நபரின் பொருட் கள், சொத்துகளை அடமானம் வைக்கலாம். ஆனால் இப்போது உள்ள அமைச்சர்கள் அ.தி.மு.க. கட்சி மற்றும் ஆட்சியையே பா.ஜ.க. வுக்கு அடமானம் வைத்துவிட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில்தான் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதையும் பொதுமக்களிடத்தில் கொண்டு சென்று வெற்றிபெற்றோம். ஆகையால் கருத்து கணிப்புகள் அனைத்தையும் மீறி பொதுமக்கள் ஆதரவோடு அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடுவோம்.

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் முறையாக விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் தேவை. பொதுமக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட் பாளர் எம்.கோதண்டபாணி, காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள், காஞ்சீபுரம் நகர செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் ஆர்.நாராயணசாமி, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பார்த்தீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story