கடலூரில், வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வினியோகித்த சிறுமி


கடலூரில், வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வினியோகித்த சிறுமி
x
தினத்தந்தி 29 March 2019 11:28 PM GMT (Updated: 29 March 2019 11:28 PM GMT)

கடலூரில் வாக்களிக்க வலியுறுத்தி சிறுமி, துண்டு பிரசுரம் வினியோகம் செய்தாள்.

கடலூர், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

அதேப்போல் கடலூரில் ஒரு சிறுமியும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாள். சிறுமியின் பெயர் ச.பவதாரணி. கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன்கோவில் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறாள்.

அந்த சிறுமி பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தாள். அதில் சித்திரை மாதம் 5-ந்தேதி(18-4-2019) வியாழக்கிழமை சதுர்த்தசி திதியும், ஹஸ்தம் நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுவதால், 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் வாக்கினை பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ் விழாவில் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் பெரும் குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. இச்சிறுமியின் அசத்தல் விழிப்புணர்வு பொதுமக்களை கவர்ந்துள்ளது.

Next Story