ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல்


ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2019 4:30 AM IST (Updated: 1 April 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அனந்தபத்மநாபன் மற்றும் அலுவலர்கள், பாகலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த முகமது ஜாவித் உசேன்(வயது 29) என்பவர் உரிய ஆவணம் இன்றி 6 லட்சம் ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் மாலூரில் கிரானைட் ஷோரூம் நடத்தி வருவதாகவும், தொழில் நிமித்தமாக ஓசூருக்கு அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த 6 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான விமல்ராஜிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அப்போது, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், ஓசூர் தாசில்தார் பாலசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story