வருகிற 23-ந் தேதி 2-வது கட்ட தேர்தல், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - மல்லிகார்ஜுன கார்கே, மதுபங்காரப்பா உள்பட 73 பேர் மனு தாக்கல்

கர்நாடகத்தில் வருகிற 23-ந் தேதி 2-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். மல்லிகார்ஜுன கார்கே, மதுபங்காரப்பா உள்பட 73 பேர் நேற்று வேட்பு மனு செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்டது. 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அதாவது சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா ஆகிய தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த 14 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முக்கியமாக காங்கிரஸ் சார்பில் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா சார்பில் உமேஷ்ஜாதவ், தார்வார் தொகுதியில் பா.ஜனதா சார்பில் பிரகலாத்ஜோஷி, சிவமொக்காவில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் மது பங்காரப்பா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
மது பங்காரப்பா, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரி டி.கே.சிவக்குமார், முன்னாள் மந்திரி காகோடு திம்மப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.
அதே போல் கலபுரகியில் பா.ஜனதா வேட்பாளர் உமேஷ்ஜாதவ் மனு தாக்கல் செய்தபோது, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, முன்னாள் மந்திரிகள் பாபுராவ் சின்சனசூர், மாலகரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சிக்கோடியில் பா.ஜனதா வேட்பாளர் அண்ணாசாகேப் ஜோலே, கொப்பலில் பா.ஜனதா வேட்பாளர் சங்கண்ணா கரடி ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மனுக்களை தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
நேற்று முன்தினம் வரை 99 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 73 பேர் மனு தாக்கல் செய்தனர். ஆகமொத்தம் 2-வது கட்ட தேர்தலுக்காக நேற்று வரை 172 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (வெள்ளிக்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
Related Tags :
Next Story