தமிழகத்தில் 2023-ம் ஆண்டுக்குள் 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு


தமிழகத்தில் 2023-ம் ஆண்டுக்குள் 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 11:15 PM GMT (Updated: 4 April 2019 11:29 PM GMT)

தமிழகத்தில் 2023-ம் ஆண்டுக்குள் 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கோவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவை மாவட்டம் துடியலூர் மற்றும் சாய்பாபாகாலனியில் பிரசாரம் செய்து வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்குடன் பல்வேறு திட்டங்களை தீட்டினார். அவரது வழியில் தற்போதைய அரசும் ஏராளமான திட்டங்களை தீட்டி வருகிறது. குடிசை வீடுகளில் கஷ்டப்படும் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு கான்கிரீட் வீடுகள் கட்ட இந்த அரசு முடிவு செய்தது. தமிழகம் முழுவதும் இதுவரை 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் கொங்கு மண்டலத்தில் மட்டும் 1¼ லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. வருகிற 2023-ம் ஆண்டுக்குள் 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார். இது பலிக்காததால் இந்த அரசு மீது அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா 27 ஆண்டு காலமாக பல்வேறு சோதனைகள், வேதனைகளை தாங்கிக்கொண்டு அ.தி.மு.க.வை வளர்த்தார். இன்றைக்கு 1½ கோடி தூய தொண்டர்களை உருவாக்கி விட்டு அவர் சென்றுள்ளார். இந்த இயக்கம் ஒரு ஆலமரம். இதற்கு 1½ கோடி தொண்டர்கள் விழுதுகளாக உள்ளனர். தமிழகம் முழுவதும் வேரூன்றி உள்ளனர். சுனாமி, பூகம்பம் வந்தாலும் அசையாது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலோடு அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்று கூறுகிறார். உங்கள் தந்தையால் கூட முடியவில்லை. உங்களால் முடியுமா?.

பெண்கள் நாட்டின் கண்கள் என்பதால் திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் என ஏழை பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். திருமண நிதி உதவி திட்டம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து 8 கிராம் ஆக உயர்த்தி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். ஜெயலலிதா பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்பு வழங்கினார். அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் தொகுப்புடன் தற்போது ரூ.ஆயிரம் வழங்கி வருகிறார்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் வறட்சி நிலவுவதால் 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கு 4 நாட்கள் மட்டுமே பணம் வழங்கப்பட்ட நிலையில் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த உடன் நீதிமன்ற தடை விலக்கப்பட்டு ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

மதுரையில் தற்போது எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் உதவியினால் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. தென்மாவட்டங்களில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு தற்போது கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடத்தி வருகிறார். எனவே தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவுடன் நலத்திட்டங்களை செயல்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், ஜெயராம், செந்தில் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முன்ன தாக சாய்பாபா காலனியை சேர்ந்த லட்சுமணன் என்பவ ரின் மகனுக்கு சிவகார்த்தி கேயன் என்று ஓ.பன்னீர் செல்வம் பெயர் சூட்டினார்.

முன்னதாக நீலகிரி மாவட்டம் கூடலூர், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 4 ஆண்டுகளாக நெல் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மத்திய அரசின் கிரிஷ்கருமா விருது கிடைத்துள்ளது. மேலும் உலக முதலீட்டாளர் மூலம் தமிழகத்தில் ரூ.3 லட்சம் கோடியில் தொழில்கள் தொடங்கப்பட்டு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக இருந்த ராஜபக்ஷே ஒரு சர்வாதிகாரி போல் இருந்து இலங்கை தமிழர்களை பல்வேறு சித்திரவதைக்கு ஆளாக் கினார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் 5 லட்சம் பேர் முள்வேலிகளுக்குள் வைக்கப்பட்டனர்.

அப்போது தமிழக முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து விட்டு இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என அறிவித்தார். அப்போது ராணுவ தாக்குதலுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் இருந்த இலங்கை தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் வெளியே வந்தனர். இந்த சமயத்தில் திடீரென ராணுவ தாக்குதல் நடத்தி 1½ லட்சம் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

போரை உடனடியாக நிறுத்துங்கள் என இந்திய அரசாங்கம் வற்புறுத்தி இருந்தால் இலங்கை அரசு போரை கைவிட்டு இருக்கும். ஆனால் இலங்கை தமிழர்களை பாதுகாக்க முன்வராமல் அன்றைய மத்திய, மாநில அரசுகள் இருந்தன. ஆனால் இதை எல்லாம் மறந்து விட்டு தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு, கனிமொழி அங்கம் வகித்த மத்திய குழு இலங்கை சென்று ராஜபக்ஷேவை சந்தித்து விருந்து சாப்பிட்டனர். மேலும் அவர் வழங்கிய பரிசு பொருட்களை பெற்று கொண்டு வந்தனர். இலங்கை தமிழர்களை பாதுகாக்க மற்றும் தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தி.மு.க. ஆட்சி இருந்தது. ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற உடன் சட்டரீதியாக போராடி காவிரியில் நமது உரிமையை பெற்று தந்தார். இப்போது தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறது.

தமிழ்நாட்டில் சாதி, மத சண்டைகள் இல்லாமல் அமைதி பூங்காவாக திகழ்கிறது. வன்முறை கலாசாரத்துக்கு பெயர் பெற்றது தி.மு.க. தமிழ்நாட்டில் நிலவிய மின்சார பிரச்சினையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றைக்கு ஜோசியக்காரர்கள் பேச்சை கேட்டு கொண்டு மு.க.ஸ்டாலின் கலர் கலராய் சட்டை அணிந்து சாலையில் நடக்கிறார். சைக்கிள், டிராக்டர் ஓட்டுகிறார். இல்லை எனில் டீக்கடை முன்பு அமர்ந்து டீ சாப்பிடுகிறார். நான் டீக்கடையையே நடத்தியவன். உங்கள் பாச்சா எங்களிடம் பலிக்காது.

நீலகிரி முன்னாள் எம்.பி. யான ஆ.ராசா மக்களை ஏமாற்றி விட்டார். எனவே நீங்கள் அவரை விரட்ட வேண்டும். இனிமேல் நீலகிரி மலைக்கு வரக்கூடாது. பெரம்பலூரிலேயே அவர் இருக்க வேண்டும். கூடலூரில் சட்டப்பிரிவு-17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மேலும் அங்குள்ள 5 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும். உள்ளாச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவதூறாக பேசிவரும் அவர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங் கப்பட்டு விட்டது. 2-வது கட்ட பணியில் விடுபட்ட பகுதிகள் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story