இளம்வயது திருமணத்திற்கு உதவினால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு எச்சரிக்கை


இளம்வயது திருமணத்திற்கு உதவினால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 April 2019 3:45 AM IST (Updated: 7 April 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

இளம்வயது திருமணத்திற்கு உதவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு அருளரசு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறியிருப்பதாவது:-

18 வயது பூர்த்தியாகாத சிறுவர் மற்றும் சிறுமியர் இன கவர்ச்சியின் காரணமாக பள்ளி பருவத்திலேயே காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை தற்போது நாமக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

அவர்களுக்கு போதிய சட்ட அறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறி சட்டத்திற்கு புறம்பான, சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத திருமணத்தை செய்துகொள்கின்றனர்.

அவ்வாறு 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளை ஆண் நபர் திருமணம் செய்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்கும் பட்சத்தில், திருமணத்திற்கு உள்ளான சிறுமியை தவிர திருமணம் செய்துகொண்ட ஆண் நபரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதிலும் பாலியல் துன்புறுத்தல் இருந்தால் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட சிறுமிகளின் திருமணத்திற்கு ஆண் நபரின் பெற்றோரும் உடந்தையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது சம்பந்தமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பலமுறை போதுமான விழிப்புணர்வு மாவட்ட காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டும் போதுமான சட்ட அறிவு இல்லாமல் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகள் காதல் வயப்பட்டு வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும் சிறுவர், சிறுமிகளின் பெற்றோர் அவர்கள் மீது போதுமான கவனம் செலுத்தி, மிகுந்த கண்காணிப்புடன் வளர்க்க வேண்டியது தலையாய கடமையாகும்.

அது இல்லாமல் தாங்கள் டி.வி., செல்போன் போன்ற சாதனங்களில் நேரத்தை செலவழித்து குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்தால், இதுபோன்ற நிகழ்வுகளினால் காவல்துறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதனால் சமூகத்தில் அவமானமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் அதிகமாக கவனம் செலுத்தி தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க வேண்டும். திருமணம் பற்றி போதுமான சட்ட அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இளம்வயது திருமணத்திற்கு உதவி செய்யும் அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story