ஸ்டாலின் முதல்–அமைச்சர் கனவு நிறைவேறாது - டாக்டர் ராமதாஸ் பேச்சு


ஸ்டாலின் முதல்–அமைச்சர் கனவு நிறைவேறாது - டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 10 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-11T01:20:38+05:30)

முதல்–அமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

பா.ம.க. வேட்பாளராக இல்லாமல் அ.தி.மு.க. வேட்பாளராக நினைத்து அ.தி.மு.க. தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். தி.மு.க.வை முடிவுக்கு கொண்டுவர போகிறவர் மு.க.ஸ்டாலின். முதல்–அமைச்சராக போவதாக அவர் கனவு காண்கிறார். ஆனால் அந்த கனவு நிறைவேறாது. கருத்துகணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு 295 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சாராய ஆலை அதிபர் வேண்டுமா? மருத்துவர் வேண்டுமா?. கடந்த 2009–ம் ஆண்டு டி.ஆர்.பாலுவுக்கு மத்திய மந்திரி பதவி தரமாட்டேன் என்று மன்மோகன்சிங் மறுத்தார்.

இந்துக்கள் மனதை புண்படுத்தும் காரியத்தை சிலர் திட்டமிட்டு செய்கின்றனர். ராமானுஜர் படத்தை ஒரு கும்பல் அழித்தது. ஆண்டாளை கொச்சைப்படுத்திய கவிஞர் வைரமுத்துவை கண்டித்தேன். தமிழகத்தில் 20 ஆண்டுகளும், மத்தியில் 18 ஆண்டுகளும் ஆட்சியில் தி.மு.க. இருந்தது. 23 ஆண்டுகள் மது என்றால் என்ன? என்று மக்கள் தெரியாமல் இருந்தனர். ஆனால் கருணாநிதி மதுக்கடைகளை திறந்தார்.

மோடி தான் மீண்டும் பிரதமராக வரப்போகிறார். ஜாக்டோ–ஜியோ ஊழியர்கள் பிரச்சினையை முதல்–அமைச்சர் தீர்த்து வைப்பார். ஆசிரியர்கள் தவறு செய்யக்கூடாது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட தி.மு.க. இழக்கப்போகிறது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.


Next Story